வெள்ளி, ஜூன் 15, 2012

நினைவில் நின்றவை-1

                    நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதுண்டு. நாகராஜன் என்பவர் தொடர்ந்து நிகச்சிக்கு தொடர்பு கொண்டு பேசுவார். அன்றய நிகழ்ச்சியின் தலைப்பு " உங்களுக்கு ரொம்ப புடிச்ச கலர் எது? எதற்காக அந்த கலரை பிடிக்கும்" என்பது தான். வழக்கம் போல அன்றும் தொடர்பு கொண்டு, கண்டிப்பாக இன்று நான் பேசியே ஆக வேண்டும். எனக்கு மட்டும் இன்று  நீங்கள் இணைப்பு தரவில்லை என்றால்  இனிமே  நான் உங்க  நிகழ்ச்சிக்கு கால் பண்ணவே மாட்டேன் என்றும் கண்டிப்புடன் கூறினார். நானும் ஏதோ விஷியம் இருக்கப் போகுதுனு லைன் கொடுத்தேன். அன்று அவர் பேசியது பலரையும் சிந்திக்க வைத்து விட்டது.

அப்படி என்ன பேசினார்? ... 

               "எனக்கு ரொம்ப புடிச்ச கலர் கருப்பு தான். ஆனா, அந்த கருப்பு கலரை இன்னமும் நான் பார்த்ததே இல்லை. அது  சரி , அந்த கருப்பு கலர் எப்படி இருக்கும்"? என்று எதிர் கேள்வி கேட்டதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் பிறவியிலேயே பார்வையில்லாதவராம் . இத்தனை மாதங்களாக அவர் பார்வை இல்லாதவர் என்பதே அன்று தான் எனக்கும், என்னுடைய நேயர்களுக்கும்  தெரிந்தது. சிறிய  இடை வெளியோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தவர், எனக்கு பார்வை மட்டும் தான் இல்லை. ஆனா, என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இன்றி நானே செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை விதைகளை அள்ளி  போட்டு இணைப்பை துண்டித்தார். அன்றைய நாள் முடியும் வரையும் அவரை பற்றிய சிந்தனை தான்...
 
மண்ணில் புதைப்பதற்கு பதில்
பிறர் கண்ணில் விதைப்போம்.
கண் தானம் செய்வோம்!!!