வியாழன், ஜனவரி 29, 2009

நான் ரசித்த திருச்சி மாநகரம்


தமிழகத்தின் மையப்பகுதியில் சென்னை& கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தி லிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி மாநகரம். இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி. காவேரி பிரிந்தோடும் பகுதிகளில் அழகிய கோவில்கள், சிறப்பான கல்வி வழங்கும் பள்ளிகள், பாய்லர் தொழிற்சாலை என்று பல பெருமைகளைக்கொண்டது திருச்சி மாவட்டம்... எனக்கு மிகவும் பிடித்த இரு இடங்கள் என்றால் அது ஸ்ரீரங்கம்(ம)திருவானைக்கோவில்/பெரியகோயிலும் தான்... இப்படிப்பட்ட திருச்சி சங்க காலத்திலிருந்தே முக்கியத்துவத்துடன் திகழ்ந்தது என்பது எனக்கு மிகவும் பெருமைப்படும் விசயமாகப் போனதால் இந்த பதிவு..

பழம்பெருமை
தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க நகரங்களுள் ஒன்று திருச்சிராப்பள்ளி. இந்நகரம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் தமிழ்நாட்டின் இதயம் என மக்கள் குறிப்பிடுவர். இப்பகுதியில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையிலுள்ள நுண்கருவிகளைப் பயன்படுத்திய காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பின் அருகிலுள்ள நுண்ணலை ஒலிபரப்பு நிலையத்தின்(micro wave station)அருகிலுள்ள திடலில் நுண்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நுண்கருவிகளின் காலம் சுமார் கி.மு.3000 ஆண்டாகும். இக்கண்டுபிடிப்பிலிருந்து கி.மு. 3000 ஆண்டிலேயே திருச்சிராப்பள்ளியில் மக்கள் வாழத்தொடங்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

இலக்கியம் காட்டும் வரலாறு
சங்க இலக்கியங்களில் திருச்சிராப்பள்ளியைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. ஆனால் கடைச்சங்க நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் 'கறங்கிசைவிழவின் உறதைக்குணாது நெடும் பெருங்குன்றம்' என்று உறையூர்க்குக் கிழக்கே ஒரு குன்று கூறப்பட்டுள்ளது. அதன் பெயர் அது அமைந்துள்ள ஊரின் பெயர் அப்பாடலில் குறிக்கப்படவில்லை. ஆயின் சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்மந்தரும், திருநாவுக்கரசரும் அக்குன்றின் மேல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடியுள்ள பதிகங்களிலே அக்குன்றினைச் சிராப்பள்ளி என்ற பெயரால் அழைத்துள்ளதைக் காண்கிறோம்.
கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனாகிய முதலாம் மகேந்திரவர்மன் சிராப்பள்ளிப் பெருங்குன்றை ஓரிடத்தில் குடைந்து சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்தான். வடமொழியில் சிறந்த புலமைப் பெற்றிருந்த அவ்வேந்தன் எட்டு சுலோகங்கள் இயற்றி அவற்றைத் தான் எடுப்பித்த அச்சுலோகங்களிலிருந்து தான் புறச்சமயத்திலிருந்து திரும்பிச் சிவநெறியைக் கடைப்பிடித்துச் சைவனாகியதையும் சிராப்பள்ளிக் குன்றின் மேற்குகைக் கோயிலிற் சிவலிங்கத்தை எழுந்தருளிவித்ததையும் குறிப்பிட்டுள்ளான். இச்செய்திகளை நுணுகி நோக்குமிடத்து அம்மன்னனது ஆட்சியின் பிற்பகுதியிலே தான் சிராப்பள்ளிக் குன்றிற் சிவாலயம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதற்கு முன்னர் அவன் சமண சமயத்தை தழுவியிருந்த காலத்தில் அங்கே சிவாலயம் இருந்திலது என்பதும் புலனாகிறது.

ஊர்ப்பெயர்க்காரணம்
சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் சமண முனிவர்களின் கற்படுகைகள் பல கற்தலையணைகளோடு இருத்தலை இன்றும் காணலாம். இத்தலையணைகளில் அவற்றை உபயோகித்த சமண முனிவர்களின் பெயர் வரையப் பெற்றிருக்கின்றன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு அவற்றின் காலத்தை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்து வந்துள்ளமை அறியப்படுகிறது. அவர்களுள் 'சிரா' என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராய் இருந்தமைப் பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கப் பட்டு அவர் காலத்திற்குப் பிறகும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று.

நால்வரும் சிராப்பள்ளியும்
சைவ சமயக்குரவர்களாகிய திருஞானசம்மந்தரும், திருநாவுக்கரசரும் தம் காலத்தில் வழங்கி வந்த சிராப்பள்ளி என்ற அப்பெயரைத் தாம் அக்கோயிலிற் பாடியருளிய பதிகங்களிற் குறிப்பிட்டுச் செல்லுவராயினர். ஆகவே 'சிரா' என்ற சமண முனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்த சிராப்பள்ளி என்பது பின்னர் முதலாம் மகேந்திரவர்மன் அங்கு எடுப்பித்த சிவன் கோயிலின் பெயராக மாறிவிட்டமை அறியத்தக்கது. அக்கோயிலின் பெயரே பின்னர் 'திரு' என்ற அடைமொழி சேர்த்து 'திருச்சிராப்பள்ளி' என்ற ஊருக்கும் பெயராக மாறிவிட்டது.
திருச்சிராமலைக் குன்றின் மேல் மகேந்திரவர்மன் அமைத்த குடவரைக் கோயிலில் சிராமலைந்தாதி பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 10 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்கல்வெட்டு சிராமலையைப் பொன்மலை என்றும் திருமலை என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறது. அவ்வந்தாதியின் முதல் பாடல் உறையூர் நகரம் என்றும் சிராப்பள்ளி குன்று அதன் அயலது என்றும் சிராமலையின் பண்டைய நிலையைச் சுட்டுகின்றது.

சிற்றம்பரே சிறாப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மேற்குகைக் கோயிலில் முதலாம் இராஜராஜ சோழனின் 16ம் ஆண்டுக்(கி.பி. 1001) கல்வெட்டொன்றுள்ளது. அக்கல்வெட்டு விக்ரமசிங்க மூவேந்த வேளான் என்பவன் விளத்தூர் நாட்டு ஆலங்குடியில் நிலம் விலைக்கு வாங்கி அதனை உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தனன் என்று கூறுகிறது. அதனை ஆராயுமிடத்து அத்தலைவனால் இறையிலி நிலம் வழங்கப் பெற்ற சிவன் கோயில் சிராப்பள்ளி என்னும் பெயருடையது என்பது அவ்வூர் உறையூர் கூற்றத்திலுள்ளது என்பதும் நன்கு புலனாகும். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் வரகுண பாண்டியனது ஆட்சியின் 11-ம் ஆண்டில் அக்கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ள வேறொரு கல்வெட்டொன்றும் ஊரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'சிற்றம்பர் நகர்' எனவும் 'சிற்றம்பர்பதி' எனவும் குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டில் அம்பர், இன்னம்பர், நல்லம்பர் என்ற ஊர்கள் இருந்ததைப் பலர் அறிவர். அவ்வூர்களைப் போல சிற்றம்பர் என்ற ஊரும் இருந்துள்ளது. அக்காலத்தில் அவ்வூரின் பெயர் மறைந்தொழிந்தது. அவ்வூர் திருச்சிராப்பள்ளி என்னும் பெயருடன் இப்பொழுதும் வழங்குகிறது. எனினும் ஆங்கிலேயர்களது பேச்சு வழக்கின் காரணமாக 'டிரிச்சி' என்றழைக்கப்பட்டு திருச்சி என்று இன்றும் மக்களது பேச்சு வழக்கில் இருந்து வருகிறது
திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஒரு ஊரின் தலைவனுக்கும் இருந்ததாக வீரபாண்டியனின் சிவகாசி செப்பேட்டின் மூலம் அறிகிறோம். அச்செப்பேட்டில் பெண் யானையை வலமாக நடத்திச் சென்றவன் முள்ளிராஷ்டிரத்தில் குலக்கிராமம் என்ற ஊரின் தலைவன். அவன் பெயர் திருச்சிராப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை திருச்சிராப்பள்ளி பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. கி.பி. 13ம் நூற்றாண்டுல் போசளர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. போசளர்கள் திருச்சிராப்பள்ளியை அடுத்த கண்ணனூரில் தலைநகர் அமைத்து சோழநாட்டின் பகுதியை ஆளத் தொடங்கினர். பாண்டிய மன்ன முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்(கி.பி. 1251 - 1271) போசளரைத் தாக்கி முன்னோர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோனாட்டுப் பகுதியைத் தன்னடிப்படுத்த எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டுத் பெரும்படையுடன் சென்று அப்போசளர்க்குரிய நகரமாகத் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலிருந்த கண்ணனூர் கொப்பத்தை முற்றுகையிட்டு வெற்றிபெற்றான். போசளர்கள் மூன்றாம் ராஜராஜசோழன் காலம் முதல் தமக்குரியதாக வைத்திருந்த கண்ணனூர் கொப்பத்தை இழந்துவிட்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவியிலுள்ள முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 20-ம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு(கி.பி. 1288) இவன் மலைநாடு, சோழநாடு, ஈழநாடு, தொண்டை நாடு என்பவற்றை வென்றனன் என்று குறிப்பிடுகிறது. சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளிலுள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எனவே அந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த என்பது தெளிவு. திருச்சிராப்பள்ளி சோழநாட்டில் இருந்தபடியால் இவனது ஆட்சிக்காலத்தில்(கி.பி 1269 - 1311) இவனுடைய ஆளுகையின் கீழிருந்தது. கி.பி 14ம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளி விஜய நகரப் பேரரசின் ஆளுகையின் கீழ் வந்தது. விஜயநகரப் பேரரசன் இரண்டாம் தேவராயன் இறந்ததும் கலிங்கத்து மன்னன் கபிலேசுர கஜபதி விஜய நகரப் பேரரசன் பல இடங்களையும்கைப்பற்றி இறுதியில் திருச்சிராப்பள்ளியையும் கைப்பற்றினான். கலிங்க மன்னன் கபிலேகரகஜபதிக்குப் பிறகு(கி.பி. 1463 - 64) சாளுவ நரசிம்மனின் ஆட்சி காவிரியின் வடகரையோடு தடைப்பட்டு நின்றுவிட்டது. அவனுக்குப் பிறகு விஜயநகர பேரரசை முறை கேடாகக் கைப்பற்றி அரசாண்ட நரசநாயக்கன் கி.பி. 1496ல் தன் ஆதிக்கத்தைக் கன்னியாகுமரி வரைப் பரப்பினான்.விஜயநகர பேரரசுக்குப் பின்னர் ஆட்சி செலுத்திய விஸ்வநாத நாயக்கன்(கி.பி 1529-64) காலத்தில் திருச்சிராப்பள்ளி நாயக்கர் ஆட்சி கீழ் வந்தது. முதலாம் சொக்கநாத நாயக்கன் காலத்தில்(கி.பி. 1659-1682) திருச்சிராப்பள்ளி மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக்கப்பட்டது. முஸ்லீம்களும் மராட்டியர்களும் திருச்சிராப்பள்ளியின் மீது படையெடுத்தனர். ருஸ்தும்கான் என்ற முஸ்லீம் நாடோடி மன்னன் ஒருவன் கி.பி. 1682ல் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி நாயக்கரின் அரியணையில் இரண்டாண்டுகள் இன்புற்றான். சொக்கநாத நாயக்கன் ஆட்சியின் இறுதியில் மைசூர் படைகள் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டன. ஆனால் செஞ்சி, தஞ்சாவூர், மராட்டிய மன்னரின் துணையைக் கொண்டு சொக்கநாதன் மைசூர் படைகளைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து விரட்டினான்.
மேற்கூறிய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் பின்னர் கி.பி. 1801ம் ஆண்டில் திருச்சாரப்பள்ளி ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1947ம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி திகழ்ந்து வருகிறது.திருச்சிராப்பள்ளியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் வரலாறு கூறும் கல்வெட்டுகளும், ஆலயங்களும், சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும், ஓவியங்களும், கட்டடங்களும் ஊரின் பழமையையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக