செவ்வாய், டிசம்பர் 22, 2015

எனது பயணம்

பயணம்.

               சிறு வயதில் என்னை எங்க எம்மா அடித்துவிட்டு அழுகையை சமாதனப்படுத்த ஒரு உக்தியை கையாள்வார்கள். "வா ஊருக்கு போலாம்" என்று சொல்லி விட்டால் உடனே கண்ணீரை துடைத்துவிட்டு அழுகையில் இருந்து மீண்டு வெளியே வந்து விடுவேன். ஆக, சிறு வயதிலேயே பயணம் என்னுடனும், நானும் பயணத்துடனும் ஒட்டி பிறந்த இரட்டையர்களாய் பயணம் செய்யத் தொடங்கி விட்டோம். எப்பொழுது பேருந்தில் ஏறினாலும் ஜன்னலோர இருக்கை என்பது இன்றளவும் சளைக்காமல் தொடர்கிறது.

சில பயணங்கள் சந்தோஷம் தரும்.
சில பயணங்கள் கஷ்டம் தரும்.
சில பயணங்கள் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்
சில பயணங்கள் ரசிக்க வைக்கும்.

இசைப்பயணம் :
                  பயணங்கள் எதுவாயினும் இசையுடன் பயணிப்பது எப்போதுமே சளைக்காத பயணமாகி ஏதோ ஒரு அர்த்தத்தை கொடுத்துவிடுகிறது. அதிலும் இளையராஜா பாடல்கள் என்றால் இன்னும் எனர்ஜியை கூட்டி விடும். எல்லோரைப்போலவும் இசையை நான் சாதாரணமாக ரசிப்பதில்லை. நீண்ட தூரப் பயணத்திற்கு ஒரு தொகுப்பு, குறுகிய பயணத்திற்கு ஒரு தொகுப்பு, மலைப்பயணத்திற்கு ஒரு தொகுப்பு என பாடல்களையே தரம் பிரித்து ரசிப்பவன்.

                     ஏற்காடு, கொடைக்காணல், கல்வராயன்மலை போன்ற மலைப்பிரதேசங்களுக்கு செல்கையில் "செந்தாழம் பூவில்" என்ற பாடலை ரசித்துக் கேட்டால் மெய்மறந்து சந்தோஷம் கொள்ளும். அதே போல நதியே நதியே காதல் நதியே என்னும் பாடல் அருவிகளுக்கான பாடலாய் முனுமுனுப்பேன். எப்படி பயணத்தை என்னுடன் இருந்து பிரிக்க முடியாதோ, அதே போன்று, இசையையும் என்னுடைய ப்யணத்தில் இருந்து பிரித்து பார்ப்பது கடினம்.

புதிய பயணம் :
                     இதுவரை போகாத ஊருக்கு முதன் முறையாக பயணப்படுவது எபோதுமே மனசுக்கு சந்தோஷத்தை தரும். அப்படித்தான் முதன் முதலாக கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்கு முதன்முறையாக செல்கையில், போனிலேயே பேசிக்கொண்டிருந்தவரை நேரில் முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்பு போல அமைந்து விடுகிறது. புது நண்பனை சந்திக்கும் சந்தோஷம் மனசுக்குள் ஆர்ப்பரிக்கும். அந்த சந்தோஷத்தை எப்போதும் அளவிட்டு கூறிவிடமுடியாது.

பர்ஸ் தொலைத்த பயணம்.
                    எப்போதும் பயணத்தை ரசிக்கும் இந்த ரசிகனுக்கு, பண்டிகை கால பயணங்கள் பெரும்பாலும் சளிப்பையே தந்துவிடுகிறது. ஒரு முறை பொங்கல் விடுமுறைக்காக கூட்ட நெரிசலில் சிக்கிய ரோஜாவாய் நசுங்கி கொண்டு, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளக் குறிச்சி ஏறினேன். ஏறின சில நிமிடங்களில், குருவி சேர்த்தது போல சேர்த்து வைத்த பர்ஸ் பணத்துடன் கையாடப்பட்டு விட்டது. கூட்டத்தில் யாரை கேட்பது. யாரோ புண்ணியவான் அபகரித்து விட்டான் போலும் என்று எண்ணி உடனடியாக அழாத குறையாய் இறங்கி அநாதையாய் தவித்து நின்றேன். சந்தோஷத்தை மட்டுமே தந்த அந்த பயணம் அழுகையை மட்டுமே கொப்பளிக்க வைத்தது. போலீஸ்காரர் ஒருவர் உதவியுடன் 25 ரூபாய் பெற்று வேலை பார்க்கும் இடமான புதுச்சேரிக்கு திரும்பி வந்து விட்டேன். அன்றுடன் பர்ஸ் வைக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டேன்

ஆக எல்லா பயணங்களும் ஒன்று போல் அமைந்து விடுவதில்லை என்ற உண்மையை ஒரு ஒரு பயணமும் உணர்த்தி விட்டுத் தான் போகிறது ஓவ்வொரு முறையும்!

ரசிக்க கற்றுக் கொண்டால் எல்லாப் பயணங்களையும் இலகுவாக எதிர்கொள்ளலாம் என்ற உண்மையை சொல்லிக் கொடுக்கிறது ஒரு ஒரு பயணமும்!

ரசிக்க கற்றுக் கொண்டேன், அனைத்தையும்...

வாழ்க்கையும் ஒரு ஆடி அடங்கும் பயணம் தானே என்று !!!